Sunday, November 24, 2013

பிள்ளையாருக்கு லீவு விட்டிருக்கு!


- சிறுகதை -

ஜேசுநாதர், பிள்ளையார், புத்தர், அல்லாஹ் இலங்கையை அர்ச்சித்த கடவுள்கள். இவர்களிடத்தில் வெட்டுக்குத்து வந்ததாகவோ, ஏரியா பிரச்சனை நடந்ததாகவோ, கதிரை கலவரம் மூண்டதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. எவரும் சொல்லித்தரவும் இல்லை. அவர்கள் நால்வருக்குள்ளும் நல்லதொரு அண்டர் ஸ்டாண்டிங் இருப்பதாகவே எனக்குத்தெரியும். தாங்கள் நால்வரும் ஒருவரே எனக்கூட தங்களின் சில பிரசங்கிகளால் அறிவிக்கப்பட்டதாகக்கூட எனக்கு யாரோ சொல்லிக்கொடுத்த ஞாபகம். இவர்கள் நல்ல நண்பர்கள். நல்ல சகோதரர்கள். தங்களுக்குள்ளே நல்லதொரு உறவை வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும், இதை சொல்லும் பொழுது இவற்றை ஏற்றுக்கொள்வதாய் சுகுமார் சாடை காட்டாமல் எதிர் புறமாய் தலையை அசைத்துக் கொண்டது எனக்கு கோவத்தை உண்டுபண்ணியது. 

நன்றாக ஞாபகமிருக்கிறது அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. சூரியன் வெளியே வருவதற்குள் நான் விமான நிலையத்துள் சென்று சேர்ந்துவிட்டேன். காலை வருவதற்குள் லண்டனில் இருந்து என் நண்பன் சுகுமார் வந்திடவேண்டும். இதுவே எனக்கு சொல்லப்பட்ட திட்டம். ஒரு பக்கம் சிலர்  சிலரை கட்டிக்கொண்டு அழுவதையும், மறு புறம் சிலர் ஓடிச்சென்று கட்டியணைத்து சுகம் விசாரிப்பதையும் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எனது கண்களில் திடிரென வந்து விழுந்தான் சுகுமார். "டேய் எப்பிடிடா இருக்கா??" என கேட்டவாறு கட்டியணைத்தவனை நானும் இறுக அணைத்து "நல்லா இருக்கேண்டா! எப்பிடி???" என்றேன். பதின்மூன்று வருடங்கள் ஸ்கைப்பிலும், முகப்புத்தகத்திலும் மட்டும் வந்தவன் இன்று நேரடியாக எனக்குமுன் நிற்கிறான். இருவரும் பேசியபடி வெளியே வந்து ஊர் நோக்கி புறப்பட்டோம்.

ஊரை சென்று அடைவதற்குள் சுகுமாரிடமிருந்து ஏகப்பட்ட விசாரணைகள், கேள்விகள். சில கேள்விகள் தவிர்த்து பலகேள்விகளுக்கு என்னிடம் விடையிருந்தது. அரசியல், தமிழ் தேசியம், போராட்டம் போன்றவையே அந்த சில. தனது வன்னியையும், வடக்கையும் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக இணையத்திலும், தொலைக்காட்சிகளிலும் மட்டும் பார்த்து கேட்டு வளர்ந்தவன் இல்லையா, அதுதான் நேரில் வந்ததும் ஏகப்பட்ட சந்தேகங்கள் அவனிடம். திரும்ப திரும்ப அவன் கேட்ட சில கேள்விகளால் கோவம் அடைந்த என்னை சரி செய்து சாரி கேட்டு இறுதியாக ஒரேயொரு வில்லங்கமான கேள்வி மட்டும் கேட்டு முடித்தான். வரப்போகும் மாகாணசபை தேர்கள் தொடர்பாக நீ என்ன நினைக்கிறாய் என்கின்ற கேள்வி அது.  அதற்கு ஒரு வாசல் மூடினால் இன்னொரு வாசல் கட்டாயம் திறப்பான் கடவுள் என்றேன். அவ்வளவுதான். புரிந்துகொண்டானோ இல்லையோ ஓகே என தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

அவன் ஊர் போய் சேர்ந்தோம். அவனிற்கோ ஏகப்பட்ட சந்தோசம். என்ன மச்சான் நம்ம ஊரு இவ்வளவு மாறிப்போச்சு என வியக்கும் போதெல்லாம் ஊர் மட்டுமில்ல மச்சி நம்ம சனமும்தான் என பதில்சொல்லி அவன் புருவங்களை உயரப்பண்ணுவேன். A9 ஐ பார்த்து எவ்வளவு அழகா செய்திருக்கிறாங்க என்றபோது 'ரோட்டுக்களை மட்டும்' என சொல்லி தலை குனிந்தேன். இருந்தாலும் இங்க வந்ததும் அந்த  பழைய ஞாபகங்கள் எல்லாம் வருதுடா எனச் சொன்னபோது மட்டும் 'உஷ்' எனச்சொல்லி அவன் வாயை மூடினேன். 

ஒருவாறு ஊரை அடைந்தபோது மணி இரவுச்சாப்பாட்டிற்கு சரியாய் இருந்தது. அவன் விருப்பப்படியே சிவப்பு அரிசிச் சோறும்,  இரணை மடு குள விரால் மீன் குழம்பும், முருங்கைக்காய் பிரட்டலும் பரிமாறப்பட்டது. வயிற்றையும் மனதையும் நிரப்பிய அந்த சாப்பாட்டோடு படுக்கைக்கு போனோம். எனக்கோ தூக்கம் கண்களை பிய்த்துக்கொண்டு வந்து இமைகளில் தொங்கிக்கொண்டிருந்தது. 'நான் எவ்வளவு காலத்திற்கு பிறகு நம்ம தேசத்திற்கு வந்திருக்கேன்... ஒனக்கு தூக்கம் கேட்குதா..?' என என்னை திட்டினான் சுகுமார். 'ஆமா, நாங்க முழிச்சிருக்க வேண்டிய நேரத்திலெல்லாம் முளிச்சிருந்ததால்தான் இப்பெல்லாம் எங்களுக்கு இப்படி நித்திரை வருது.. நீங்க அப்ப  நல்லா  தூங்கிநீங்கதானே.. இப்பவாவது கொஞ்சம் முளிச்சிருங்க..!' எனச்சொல்லி மறுபக்கம் புரண்டு படுத்தேன். இருந்தும் அவன்தான் வென்றான். 'சரி சொல்லித்தொலை' என சிணுங்கிய கோவத்தோடு அவன் பக்கம் மீண்டும் புரண்டேன்.

விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம். திரும்பவும் பாடசாலைக்காலம், பருவகாதல், எழுட்சிப்போராட்டம், இடப்பெயர்வுகள், காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்கள், தொலைவுகள், இரத்த சிந்தல்கள், மர்மங்கள், அரசியல், ஆதிக்கம், ஆக்கிரமிப்பு என அன்று இரவு பூராவும் நாங்கள் பேசியவையின் பட்டியல் நீண்டுகொண்டு போனது. இறுதியாக 'சுமதி எங்க மச்சான்?' என்ற கேள்வி எதிர்பாராமல் அவன் வாயில் நழுவி நிலத்தில் வந்துவிழுந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என சொல்லி பேச்சை முடித்துவிடலாம் என எண்ணியபோது 'அவ உசுரோட இருக்காவா?' என இரண்டாம் கேள்வியால் என்னைச் சுட்டான் சுகுமார். 'ஆமாட, உசுர் மட்டும் இருக்கு.. தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் இருக்காடா.. கடைசி நேரத்தில அப்பிடி ஆகிடிரிச்சி..' என சொல்லிமுடிக்கையில் அவன் எழுந்திருந்து படுத்திருந்த பாயின் நுனிகளை நீண்டிருந்த அவன் நிகங்களினால்பிய்த்துக்கொண்டிருந்தான் சுகுமார். சுமதி இவன் பள்ளிக்காதலி. அந்த நாட்களில் பாடசாலை பங்கரினுள்தான் இந்த காதல் முதல் முதல் செட் ஆகியது. பின்னர் நடந்தவை பற்றி நானோ சுகுமாரோ இவ்விடத்தில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் தமிழன் என்றால் அது புரியும்!

நீண்ட நாட்களின் பின்னர் காலையில் சுகுமார் சூரியனை தாயகத்தில் தரிசிக்கிறான். 'ஒரே சூரியன் எண்டாலும் அத வன்னில இருந்து பார்த்தா அதுக்கு ஒரு கம்பீரம் தெரியுது மச்சான்..' என சொல்லிக்கொண்டு வானத்தை அண்ணாந்துபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான் அவன். நானோ பழகிப்போன சூரியனோடு எதற்கு பேச்சு என தூக்கத்தில் குறியாய் இருந்தேன். நேரம் கொஞ்சம் கழிந்ததும், வெளியே போகலாம் என முடிவெடுத்து வீட்டின் பின் புறத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்தோம். இரயில் வந்தாலும் வன்னியில் உலாவ சைக்கிளை விடவும் ஒரு இனிமையான வாகனத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும், அதை பார்க்க வேண்டும், இதை பார்க்க வேண்டும் என அவன் அளப்பரைகளில் சைக்கிள் மிதிக்கவே வேண்டாம் என ஆகியது எனக்கு. 

சுகுமார் கேட்டது போலவே அங்கும் இங்கும் என அவன் பார்க்க, போக வேண்டி ஆசைப்பட்ட சகல இடங்களையும் கூட்டிச்சென்று காட்டி ஆகிவிட்டது. நேரம் நண் பகல் கடந்து மாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. எனக்கோ சைக்கிள் மிதித்து கால்களில் தலைகாட்டிய வலி ஒருபுறம், வயிற்றை அடிக்கடி நக்கிப்போகும் பசி மறு புறம். வீட்டிற்கு கிளம்பலாம் என நினைத்து சைக்கிளை திருப்புகையில் 'மச்சான்  முக்கியமான இடம் ஒண்டை விட்டுட்டோமே.. நம்ம ஆலமரத்து பிள்ளையாரடி..' என சத்தமிட்டான் சுகுமார். 'ஆமால்ல...' என மறுபடியும் சைக்கிளை திருப்பி நாங்கள் அன்றெல்லாம் மாலை வேளையில் அடிக்கடி கூடும் அந்த ஆல மரத்தடி பிள்ளையாரை நோக்கி மிதிக்க ஆரம்பித்தேன். போகையில் அவனிற்கு என்ன ஞாபகம் வந்ததோ தெரியவில்லை எனக்கோ அந்த நாட்களில் அந்த பிள்ளையார் கோவிலிற்கு தாவணி கட்டிவரும் அழகிய பெண்களை பார்த்து ஜொள்ளு விட்ட காலங்கள் தான் மனதில் வந்து வந்து மறைந்து கொண்டிருந்தது.

ஒருவாறு அங்கு வந்து சேர்ந்தோம். அங்கு சைக்கிளை ஓரமாய் நிறுத்தியதுதான் தாமதம். 'டேய், என்ன மச்சான், இங்க இருந்த நம்ம பிள்ளையார காணோம்!! அவர் இருந்த இடத்தில புத்தர் இருக்கார்?? என்னடா ஆச்சு..?? தடபடவென ஆர்ப்பரித்தான் சுகுமார். 'சொல்லுடா... என்ன ஆச்சு..?' திரும்ப திரும்ப அதே கேள்வி.என்னிடம் பதில் இருக்கா என்ன? ஏதோ பிள்ளையாரை நானே கடத்திக்கொண்டுபோய் கொலை செய்த மாதிரி... இவன் பேச்சு.. கொஞ்சமேனும் ஆச்சரியம் இல்லாமல், கொஞ்சம் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி அவன் முகத்தை திருப்பி அவனிடம் சொன்னேன்..

"என்ன மச்சான் செய்யிறது.. கூல் டவுன்... இங்க இருந்த நம்ம பிள்ளையார் லீவில போயிருக்கார்.. அதான் அவருக்கு பதிலா இப்ப இவர் வந்திருக்கார்... பட் மீண்டும் நம்ம பிள்ளையார்  நிற்சயம் வருவார்!!... டோன்ட் வொறி கண்ணா.. இப்ப நீ வா நாம வீட்டுக்கு போவம்!!"

நன்றி : http://rajamal.blogspot.com

0 comments:

Post a Comment